I have written a descriptive FB post regarding my first 100 Days of Running completion which is mentioned below:

I was on a business trip in China and while I was running I met with an accident on 60th day. I still managed to finish my 100 days, and on 100th day I ran a half marathon and finished strongly.

This year, I have registered with my wife for the ‘100 Days of Running’ challenge.

Below is my fb post:

என்னை விடாமல் துரத்திய
&
நான் விடாமல் ஓடிய

அந்த 💯 நாட்கள் கதை இது…

“தேங்கி நின்று விடச்செய்யும் சில வாழ்வியல் நிகழ்வுகளை இறுதிப்புள்ளியென நினைத்து பதறி விடுகிறோம். அது, நமக்கான பெரும் வானம் தொடங்கும் ஆரம்பப்புள்ளியாகவும் இருக்கலாம்”

இந்த வரிகளை எங்க Kesevan VS சார் ரெண்டு மூனு முறை எனக்கு அறிவுரையாக சொல்லி சில சிக்கலான கட்டங்களில் மீண்டு வர காரணியாக இருந்திருக்கிறார், இந்த முறையும் இந்த 100 நாள் ஓட்டத்தை சவாலாக எடுக்க வைக்க அந்த வரிகள் தான் உந்தி விட்டன…!!

ஆமாம் , நமக்கு எதுவுமே அவ்வளவு சீக்கிரம் சுலபமா கிடைச்சுடாது, ஆனா நானும் விட்டதில்லை , அதிகமா பாட புடிக்கும் ஆனா சரியான & முறையான பயிற்சிகளை பண்ணி பாட்டை வளர்த்துக்க முடியலை, ஆசைப்பட்ட மேடைகளையும் புடிக்க முடியலை, ஏதோ ஸ்ம்யூல் எனும் வரப்பிரசாதம் கிடைக்க ஆசை தீர பாடிக்குட்டு இருக்கேன்..!!

அதே போலத்தான் நல்லா ஓடி விளையாட ஆசை, ஆனால் பன்னிரண்டாவது வரையும் அவ்வளவா உயரம் வராததால பள்ளிக்கூடத்துல பசங்க எந்த விளையாட்டிலும் சேர்த்துக்க மாட்டாங்க , பள்ளிக்கூடம் முடிஞ்சதும் 16வயதினிலே சப்பாணி போல இழுத்துட்டு இழுத்துட்டு பணத்தை தேடி அதன் பின் ஓடி பிடிக்கவே பதினஞ்சு வருசங்கள் என்னை விட வேகமா ஓடிடுச்சு, எல்லாம் முடிஞ்சு தகப்பனான பிறகு பார்த்தா வயசு ஜோதிகா படமாட்ட 36 வயதினிலே ன்னு ஆயிடுச்சி..!!

இடையுல கொஞ்ச நாள் நண்பர்கள் தயவுல ஷட்டில் விளையாட ஆரம்பிச்சப்ப தான் நாலஞ்சு வருஷத்துக்கும் முன்ன நடந்த சின்ன விபத்தால இறங்கின தோள்பட்டை அடிக்கடி இறங்க ஆரம்பிச்சது, நாமளும் கில்லி பட விஜய் கணக்குல கை இறங்க இறங்க அங்கனயே கிரவுண்டுல உட்கார்ந்து அப்படி இப்படி மேஜிக் பண்ணி இறங்கினத அழுங்காம ஏத்திப் போட்டுட்டு விளையாண்டுட்டு இருந்த போது ஒரு ஞாயித்துக்கெழமை கை மொத்தமா கழண்டு போக கில்லி மேஜிக்கெல்லாம் பலிக்காம தூக்கி போட்டுட்டு ஆஸ்பத்தரியில கொண்டு போயி சேர்த்து ரெடி பண்ணி விட்ட டாக்டர் இனிமேல் வாழ்க்கையுல ஷட்டிலு கிரிக்கெட்டு ன்னு எதாவது ஆசைப் பட்டீன்னா அப்புறம் கை ரெகுலரா தொட்டில்ல தான் தூங்கும் பார்த்துக்க ன்னு சொல்லி ஆப்படிச்சு மொத்தமா சுவிட்சை ஆஃப் பண்ணி வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டார்…!

என்னடா இப்படி ஆயிடுச்சே ன்னு இருந்தப்ப தான் நம்ம குரு Shan ஜீ ஆரம்பிச்சிருந்த #உள்ளத்தனைய_உடல் ன்ற ஒரு வரப் பிரசாதத்தை நம்ம P Kathir Velu சார் தயவு பண்ணி நுழைச்சு விட்டார், உள்ள வந்த பிறகு தான் புதுசா நம்பிக்கை வந்து நடக்க ஆரம்பிச்சேன் , அப்ப 1 கிலோ மீட்டருக்கே 15 லிருந்து 20 நிமிசம் ஆயிடும், அப்ப தான் ஓட்டக்காதலரா இருந்து ஓட்டத் தீவிரவாதியா மாறிக்குட்டு இருந்த நம்ம Rajkumar RK சகோவோட ஓட்டங்களையும் அதனால அவர் ஆன டிரான்ஸ்பர்மேஷன்களையும் பார்த்து படிச்சு சரி நாம தீவிரவாதியா ஆகாட்டி பரவாயில்லை சட்டி தீயுற அளவுக்கு வெட்டியா இருக்க வேணான்னு அவர் கிட்ட டிப்ஸ் வாங்கி அதன் படி கொஞ்சம் கொஞ்சமா ஓட ஆரம்பிச்சு ஓரளவுக்கு ஓட பழகினேன்…!!

ஆனாலும் நம்ம இருக்குற திருப்பூர்ல பணத்துக்கு பின்னால ஓடுற நாட்களும் ஆட்களும் தான் அதிகம் ன்றதால பெருசா மாரத்தான் அது இது ன்னு கலந்துக்க முடியலை, அது போல நிகழ்வெல்லாம் வெளியூர்லயே நடக்குறதால நம்ம சக தீவிரவாதி & ஓடுறதுக்குன்னே பிறந்த சிங்கம் Lion Balamurali சகோ அளவுக்கு ஊர் ஊரா தேடித்தேடி ஓடி பரிசு வாங்குற அளவுக்கு சரக்கும் இல்லை சந்தர்ப்பங்களும் இல்லை ன்றதால இவங்க எல்லாம் கொடுக்குற ஊக்கத்துல நானும் ரவுடி தான் ன்னு சொல்லி நம்ம வடிவேலு மாதிரி ரெண்டு மூனு மாரத்தான்களுக்கு போயி 5 & 10 கிமீ ன்னு நம்ம லெவலுக்கு ஓடி நமக்கு நாமே ஆறுதல் அடைஞ்சுக்கிட்டு போயிக்குட்டே இருந்தப்ப தான் இந்த 100நாள் ஓட்டம் ன்னு ஒரு தகவல் வந்துச்சி…!!

நமக்கு முன்ன நம்ம பிரச்சனை போயி நிக்குமே , ஏப்ரல் மாசம் ஆரம்பிக்குதுன்ற இந்த நியூஸ் கேட்டு கொஞ்ச நாள்லயே பிப்ரவரி முதல் தேதியே திரும்ப ஒரு சின்ன விபத்துல இந்த முறை நான் இறங்குறேன்னு இடது தோள்பட்டை இறங்கி , திரும்ப அதே ஆஸ்பிட்டல்ல போயி இழுத்து வச்சி கட்டி பழைய அனுபவத்தை வச்சி கொஞ்சம் பத்திரமா பார்த்துக்க சொல்லி அனுப்பிட்டாங்க..!!

ரெண்டு மாசத்துக்குள்ள ஓரளவுக்கு முக்காத்திட்டம் ரெடியாகும் போதே நம்ம சிங்கம் கொடுத்த தைரியத்துல 100நாள் ஓட்டத்துக்கு என்ட்ரோல் பண்ணி அதே தைரியத்தோட என்ட்ரி ஆகி தினமும் 3 ல இருந்து 5 கிமீ வரையும் வண்டியை உருட்டிக்குட்டு இருந்தப்ப தான் தொழிலுக்காக சைனா போக வேண்டி வர, அங்க போயும் ஒரு வாரம் சமாளிச்சு நடு ராத்திரியுல எல்லாம் ஓடி முடிச்சுட்டு இங்க திரும்பினப்ப பாதிக் கெணறு தாண்டியிருந்தேன்….!!

100நாள் ஓட்டத்துல அப்ப 54வது நாள் , காலையுல எழுந்து 5கிமீ ஓடி முடிச்சுட்டு இரயிலை புடிக்க போனவன் வண்டி நிறுத்தத்துல கீழே விழுகப் போன ஹெல்மட்டை புடிக்க பார்த்து பழைய குருடி கதவை தெறடின்ற கதையா இப்ப வலது தோள்பட்டை இறங்கி ரெண்டு கையும் பஞ்சாயத்துல மாட்டிக்குச்சே இனி எங்கே 100 நாள் ஓடப் போறோமுன்னு வீடு வந்து சேர்ந்தேன் இடுப்புல பெல்ட்டோட…!!

இருந்தும் பாதிக்கெணறு தாண்டியாச்சே ன்னு வீட்டு மொட்டைமாடியுலயே ஒரு வாரம் வூட்டம்மாவுக்கு தெரியாம தினமும் 2கிமீ முடிச்சேன், அப்புறம் அப்படியே கம்பெனி இன்ஸ்பெக்ஷனுக்கு போயிட்டு அங்க காம்பவுண்டு, கட்டாந்தரையுன்னு ரன்வாக் பண்ணி பண்ணி நாட்களை எண்ணிக்குட்டு இருந்தப்ப ஒரு நாள் ராத்திரியுல வெக்கு வெக்கு ன்னு போறதை பார்த்த என் உடன்பிறப்ப ஏன்டா உனக்கென்ன விதியா ன்னு புலம்பினான் , எப்படியோ எல்லோரையும் எல்லா சூழலையும் சமாளிச்சு ஒரு வழியா 90 நாளை தொட்டாச்சி…!!

இந்த நிலைமையுல செக்அப் போனப்ப டாக்டர் சார் இனி கொஞ்சம் இந்த பெல்ட்டை அப்பப்ப கழட்டி வச்சுக்கலாம் , வண்டியுல போக வர வேலை இருந்தா பெல்ட் போட்டுட்டு போயிக்கலாம் , இன்னும் ரெண்டு மாசம் வண்டி ஓட்டப்படாது , பதினஞ்சு நாள் கழிச்சு வாங்க MRI பார்த்துட்டு அப்புறம் என்ன பண்ணனுன்னு சொல்றேன்னு அனுப்பி வச்சிட்டார்…!

இந்த ஓட்டம் ஆரம்பிக்கும் போது எனக்கு நானே வச்சுக்குட்ட டார்கட் 400கிமீ முடிக்கனும்றது , கடைசி நாலஞ்சு நாள் இருக்கும் போது வச்ச டார்கட்டுக்கு கிட்டத்தட்ட 60கிமீ ஓட வேண்டி இருக்கவும் , இந்த வாரத்துல ஒரு நாள் ரிஸ்க் எடுத்து 21கிமீட்டரை மூனா பிரிச்சு ஓடினதை நைட்டு போன் ஆப் மூலமா தெரிஞ்சுக்கிட்ட வூட்டம்மா பட்டைய கிளப்பி கம்ப்ளெய்ன்ட் மேலிடம் வரையும் போகும் ன்னு சொல்ல , சரி இது வேண்டாத்த வேலை ன்னு 400ஐ கை விட்டுடலான்னு மனசை மாத்திக்குட்டேன்…!!

ஆனாலும் நேத்து வீட்டில் எல்லோருக்கும் லீவுன்றத பயன்படுத்தி 10கிமீ காலையுலயே முடிக்கவும் , இன்னைக்கு வீட்டுல யாருமே இல்லைன்ற சூழல் வர, எப்படியும் இனிமேல் இந்த ஓட்டத்துக்கு வாழ்நாள் தடை வரப் போகுதுன்னு பட்சி சொல்லவும் , வாழ்நாள் ஆசையான அரை மாரத்தான் தூரத்தை ஓடி இந்த விளையாட்டை இத்தோட முடிச்சுக்குறதுன்னு முடிவு பண்ணி இன்னைக்கு ஒரு Self Motivated Half-marathon ஐ தன்னந்தனியே ஓடி முடிச்சு முதல் நாள் வச்ச டார்கெட்டான 400கிமீ ஐயும் தாண்டி முடிச்சுட்டேன்…!

இந்த நூறு நாள் ஓட்டத்தை நான் ஓட காரணமாக இருந்து & ஊக்கம் கொடுத்த இங்க பெயர் சொன்ன & சொல்லாத என் #உள்ளத்தனைய_உடல் U2 குடும்பத்துக்கும் , இத்தனை உடல் பிரச்சனையுலயும் சரி ஏதோ பிரச்சனை பெருசாகாம பண்ணி முடிக்கட்டுமுன்னு எனக்கு ஓட SPACE கொடுத்த என் வூட்டம்மாவுக்கும் , மொத்த குடும்பத்துக்கும் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி…!!

இனி வரும் திங்களன்று டாக்டரை பார்த்து அவர் அட்வைஸ் படி அடுத்த ஒரு வருடம் தோள்பட்டைகளை வலுப்படுத்த வேண்டி ஓட்டம் , ஆட்டம் பாட்டத்திற்கெல்லாம் பெரிய டாடா சொல்லிட்டு உடம்பையும் எனக்காக இருக்குற குடும்பத்தையும் பார்த்துக்க போறேன்..!!

முடிந்தால் 2020 ல் நான் முழுவதும் தயாரானால் மீண்டும் எதாவது ஒரு சாலைகளில் பழைய படி ஓட்டக்காரனாக உங்களை சந்திக்கிறேன் , அதுவரை கால் வலிக்க ஓடி, அதை கை வலிக்க எழுதிய இந்த கதையை கண் வலிக்க படிச்சுட்டு இருங்க நட்புகளே….